எனக்கு பிடித்த சினிமா சில

எனக்கு பிடித்த சினிமா சில

Thursday, September 29, 2016

Arnold Schwarzenegger பார்வை 1

“I’M GOING TO BE THE NUMBER ONE BOX OFFICE STAR  IN ALL OF HOLLYWOOD.”
"பாவனையே இல்ல, கட்டைப் போல நடிக்கிறான்" என்று சொல்லும் அளவுக்கு இறுக்கமான முகம், ஆங்கிலம் சரிவர உச்சரிக்க, பேச தெரியாத நிலை, ஹீரோவாகக்கூட ஆக முடியாமல் பொம்மை போல திரையில் வந்துப்போன அதுவும் அமெரிக்க குடிமகனாக இல்லாத ஒரு நடிகன்,1976 ஆண்டு ஒரு பத்திரிக்கையின் பேட்டியில் கூறியபோது பத்திரிக்கையாளர் உட்பட படித்தவர்களும் அநேகமாக சிரித்திருக்கக்கூடும். குருட்டு நம்பிக்கை என்றிருப்பர், இன்னும் சில கூட்டமோ முன் விட்டு பின்னால் கேளி செய்திருக்கும். சரியாக 15 வருடங்கள் கழித்து 1991 ஆம் ஆண்டு அதே அமெரிக்காவின் பல பிரபல தொலைக்காட்சிகள் "அந்த” நடிகனின் படமொன்றை"உலகத்திலேயே அதிகமாக வசூலான திரைப்படமாகவும்" உலகத்திலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகனாகவும்" புகழாரம் சூடிக்கொண்ருந்ததை பார்த்த பலரும் வாயடைத்து போடிருக்கக்கூடும்.அவனா இவரென்று...!!


பல எல்லைகளை கடந்து போராட்டங்களுக்கு பிறகு உலகமெங்கும் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை வசீகரித்துக்கொண்ட அந்த பெயர் Arnold Schwarzenegger/அர்னால்ட் ஸ்வார்சுநேகர்..அநேகமாக அமெரிக்க வரலாற்றில் இந்தளவுக்கு உச்சரிக்க கடினமான பெயரில் சூப்பர் ஸ்டார் உருவாகிருக்க வாய்ப்பில்லை.பாடி பில்டராக தன்னுடைய வாழ்வை தொடங்கி உச்ச சினிமா நட்சத்திரமாக உயர்ந்தது..ஆச்சரியப்படுத்துவதாக இருந்தாலும் அதற்காக அவருடைய தியாகமும் உழைப்பும் அசாதாரணமானது.சமீபத்தில் Arnold Schwarzenegger Biography என்ற டிவி சேனலின் நிகழ்ச்சியை இணையத்தில் பார்க்க கிடைத்தது.அமெரிக்கா போக வேண்டும்:மிக பெரிய ஹாலிவுட் ஸ்டாராக ஆக வேண்டும்:பிறகு கென்னடி குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற இவரது சிறு வயது கனவுகள்...நனைவாக மாறுவதற்கு பின்னால் இருந்த மிக நீண்ட வரலாற்றை, வாழ்வில் கடந்து வந்த பாதையை காட்சி ஊடாக காண கிடைத்தது.ஆஸ்டிரியாவின் கிராமத்தில் பிறந்த ஒரு சாமான்யன் பிறகு மிக பெரிய ஸ்டாராக உருவெடுத்து ஒரு மகாணத்தின் கவர்னராக மாறிய வரலாறு மிகவும் நீண்ட, வலிகள் மிகுந்த கதை..

"வெற்றி அடைய நினைப்பவர்களுக்கு ஓர் அறிவுரை..முதலில் தோல்விகளை அடையுங்கள், கஷ்டங்களை அனுபவியுங்கள்.உங்களை ராஜாவாக உருவாக்க போவது ரோஜாக்கள் நிறைந்த பாதையில்லை.அவை கரடு முரடான காட்டு முட்கள் நிறைந்தவை..காடுகளை அழியுங்கள்..மலைகளை முட்டுங்கள்.பிறகுதான் வெற்றி கதவு..திறக்க உதவ போவது சாவியல்ல..உங்கள் சாதனை"வாழ்க்கையில் நான் தோல்விகள் சந்திக்கும்போது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் சொல்லிக்கொள்ளும் வாசகம் இது.

"THERE IS NO OVERNIGHT SUCCESS OR OVERNIGHT SUPERSTAR."

என்று சொல்வார்கள்..ரஜினி, ஜாக்கிச்சான், ஆர்னல்டு போன்ற நடிகர்களை பார்க்கும் போது அடிக்கடி இந்த வாசகம் நினைவுக்கு வரும்.ஒரே நாளில் உயரத்தை தொட்டவர் எவருமில்லை..அதேப்போல் ஒரே திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நடிகரும் கிடையாது.அதற்கு பின்னால் இருக்கும் அவமானங்களும் உழைப்பும் எழுத்துக்களால் சித்தரிப்பது கடினம்..வந்தோம் நடிச்சோம்..காசு கிடைத்தது.செட்டல் ஆனோம்.இனி என்ன? என்று நினைப்பவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஏராளம்.ஒரு வெற்றியை தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைக்க போராடும் குணமும் இவர்கள் செய்யும் புதிய முயற்சிகளும் தலைமுறை கடந்த ரசிகர்களை இவர்களுக்கு சொந்தமாக்குகிறது.

எனக்கு பிடித்த டாப் 10 நடிகர்ளில் எம்ஜிஆரும் ஒருவர்.நான் பிறப்பதற்கு முன்னமே மறைந்துவிட்ட நடிகரை எனக்கு பிடித்த நடிகராக என் நண்பர்களிடம் சொன்னால்..என்னடா பழைய நடிகர சொல்ற என்று கேட்பார்கள்.சிலரை காரணமே இல்லாமல் பிடிக்கும்.அந்த வரிசையில் எம்ஜிஆர்-சிவாஜி-இயக்குனர் ஸ்ரீதர், நாகேஸ் என பட்டியல் நீளும்.இவர்களது வாழ்க்கை பின்னனியை உற்றுப்பார்த்தால் கொஞ்சம் புரியும்.சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் மக்கள் மனதை ஆட்கொண்ட எவருமே எளிமையான வழியில் வாய்ப்பு கிடைத்து வந்தவர்களோ, சிம்பிளாக வெற்றிக் கண்டவர்களாகவோ இருக்கவே மாட்டார்கள்.கடின உழைப்பும், விடாமுயற்சியும், பெரிய கனவுகளும், முற்போக்கான சிந்தனைகளும், திறமைகளும் மக்களை தன் வசம் ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாவே இருப்பார்கள்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் போது ஒரு நடிகன், ஸ்டாராகலாம்.நல்ல கதைககள், உயர்ந்த இலட்சியங்கள் இணையும் பொழுது ஒரு சாதாரண ஸ்டார் கூட சூப்பர் ஸ்டாராக உருவாகலாம்.அந்த சக்தி அதற்கு உண்டு.டெர்மினெட்டெர் என்ற கதையும் உயர்ந்த கனவும்தான் இன்று ஜேம்ஸ் கேமரனை அவதார் வரை கொண்டு சென்றுள்ளது.சிறந்த கதைகளும் கனவுகளும்-தான் இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்த சத்யரஜித் ரே என்ற ஒரு சாதாரண ஓவியனை, மிக சிறந்த இயக்குனராக உலக சினிமா உயர்ந்து பார்க்கிறது.   
ஹெர்க்குலஸ் இன் நியூ யோர்க் படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்திருந்தாலும், முதல் வெற்றியை அடைய ஆர்னல்டு, சுமார் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிருந்தது.கானன் தி பார்பரியன் ரசிகர்களை கவர்ந்திட, டெர்மினெட்டர் மக்கள் மனதில் ஆர்னல்டை இடம் பெறச்செய்தது.தொடர்ந்து வந்த கமாண்டவும், பிரேடேட்டரும் சாதாரண நடிகனாக இருந்தவரை ஸ்டாராக மாற்றியது.

40 வயது ஆகிவிட்டது..வாழ்க்கை முடிஞ்சு போச்சுனு என்பவர்கள் இருக்கும் உலகில், LIFE BEGIN AT 40 என்பதற்க்கு ஆதாரமாய் ஆர்னல்டின் அனைத்து வெற்றிகளும் 40 வயதை கடந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது...ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக்கொண்டதோடு நில்லாது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மகாணத்தின் கவர்னராக வெற்றிக்கண்டதை எண்ணும்போது அதிசயக்கவைக்கிறது.          
                                             
"மனம் உண்டானால் மார்க்கம் உண்டு".. 
"ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்" என்ற பாடல்களும் பழமொழிகளும்தான் ஞாபகம் வருகிறது        

ஹாலிவுட் சினிமாவின் எனது முதல் அறிமுகம் ஆர்னல்டும் அவரது திரைப்படங்களும்தான்..அவரது படங்கள் மீதான பைத்தியம் தீர்ந்தப்பாடில்லை..ஏறக்குறைய எல்லா படங்களும் பார்த்துவிட்ட நிலையில் எனக்கு பிடித்த டாப்-டென் ஆர்னல்டு திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் சமீபத்தில் உதித்தது..அதற்கான முன்னோட்டமாக இந்த பதிவு..மீண்டும் சந்திக்கலாம் "பார்வையோடு"..    

Saturday, September 24, 2016

நான்..

ஒரு சராசரி மனிதனின் ஆயுள் 80 வயது என்றால் அதில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களை சினிமாவுக்காகவே செலவிடுவதாக ஆய்வு கூறுகிறது..அந்த அளவுக்கு சினிமாவின் வளர்ச்சி என்பது கடந்த 100 ஆண்டுகளில் நம் கற்கனைக்கு அப்பால் சென்றிட, சாமன்யன் தொடங்கி உயர்த்தர மக்கள் வரை அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்களை எழுத்துக்களால் முழுமையாக விவரிப்பது கடினம்.
வேலை விட்டால் வீடு..வீடு விட்டால் வேலை என்ற நெருக்கடியான சூழ்நிலையில், பொழுதுபோக்கு அமசங்களைத் தாண்டி கடந்தக்காலத்தின் நினைவுகளையும் நிகழ்க்கால உண்மைகளையும் எதிர்க்காலத்தில் அறிந்துக்கொள்ள மிக எளிமையான ஒரு கருவியாக சினிமா உருவெடுத்துக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.இனம், மொழி, மதம், நாடு கடந்த நிலையில் உலக மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுக்கூடும் களமாக சினிமா இன்று..பொது மொழி பேசுகிறது..அந்த மொழி பேச கற்றுக் கொண்டிருப்பவர்களின் வரிசையில் நான்..

எழுதுவது என்பது பொதுவாகவே கொஞ்சம் சோம்பலான விஷயம்.அதுவும் என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் தலையில் கை வைத்தப்படி உட்கார்ந்து இருப்பது கொடுமையான ஒன்று.ஆனாலும் ஏதாவது எழுதலாம் என்று சில கதைகள் கிறுக்கிய அனுபவமெல்லாம் இருக்கிறது..அதுவும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் கொஞ்சம் தமிழ் இணையத்தளங்கள் வரை கொண்டு வரவே அன்று தெரிந்துக்கொண்ட வார்த்தைதான் இந்த "உலக சினிமா"..அன்றுவரை மலேசிய தமிழனாக இருந்தாலும் இந்திய அதுவும் தமிழ் படங்களைத் தவிர வெறெந்த மொழி படங்களும் பெரிய அளவில் பார்க்காத பட்சத்தில் தமிழ் பதிவர்கள் மத்தியில் அறிந்துக்கொண்ட ஒரு வார்த்தை அது.அதை பற்றி மேற்க்கொண்டு தேடியபோதுதான் தெரிந்தது ஓர் உண்மை.அதுவரை பார்த்து ரசித்த சூப்பர்மேட், எக்ஸ் மேன், ஸ்பைடர்மேன் போன்ற படங்களைத் தாண்டி வேற்று மொழி பேசும் அயல்நாட்டு திரைப்படங்களின் உலகம் என்பது பரந்து விரிந்தது என்று..படித்துக்கொண்டிருக்கும் போதே சினிமாவை பற்றி தேடலானேன்..சில நல்ல திரைப்படங்களின் அறிமுகம் மேற்க்கொண்டு சினிமா மீதான எனது பார்வையை திருப்பியது.அதன் தொடர்பான சில எண்ணங்களை யாருனாவது பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்..தமிழ் ப்ளோகிங் உலகத்துக்கு கொண்டு வந்தது..எனது முதல் ப்ளாக்கின் பெயர் Kumarans கனவுகள் ஆயிரம்..அது தொடங்கும்போது என்னுடைய வயது 19-தான்..இவ்வளவு தரமான விமர்சகர் மற்று ரசிகர்களின் மத்தியில் நாமெல்லாம் எந்த மூலை என்ற ஓர் அச்சம் தொடர்நது எழுத முட்டினாலும் சில நண்பர்களின் ஆதரவு மேற்க்கொண்டும் எழுத தூண்டியது..

சத்தியமாக நானெல்லாம் எழுதுவது விமர்சனமே கிடையாது..நான் விரும்பும் திரைப்படங்களை குறித்த திரை அனுபவங்களே தவிர எனது பதிவுகளை விமர்சனமாக இன்றுவரை எண்ணியது இல்லை..இதுவரை எழுதிய..இனியும் எழுதப்போகின்ற அத்தனையும் எனது தனிப்பட்ட சினிமா மீதான பார்வைகளே.இனி எனது சினிமா உலகம்..  
இன்றுவரை எனக்கு பிடித்த படங்களை பட்டியல் எடுத்ததில்லை..அவ்வப்போது பார்த்து சில பார்வைகளை தொகுப்பதோடு சரி..ஆனால் மறக்க முடியாத..சினிமா என்று சொன்னவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் திரைப்படங்கள் வரிசையில் சில..உங்களுக்கு பிடித்த படங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..அடுத்த பதிவில் "பார்வையோடு"..